ஆல்ப்ஸ் என்ற பெயரைத் திரை இசைப் பாடல்களில் கேட்டிருப்போம். ஆல்ப்ஸ் என்பது தென் மத்திய ஆஸ்திரியா, ஸ்லோவேனியா பகுதிகளில் துவங்கி, இடையில் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளைக் கடந்து, மேற்கே ஃபிரான்ஸ் தேசம் வரை, இம்மலைத்தொடர் பிறை வடிவத்தில் மத்தியதரைக்கடலோரம் நீண்டிருக்கிறது.
லத்தீன் மொழியில் ஆல்ப்ஸ் என்றால் வெண்மை என்று அர்த்தம். இம்மலைத்தொடர் பனி நிறைந்து வெண்மையாக இருப்பதால், ஆல்ப்ஸ் என்ற பெயர் பெற்றது.
சுமார் ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் நீளமும், இரண்டு லட்சத்து ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பல சிகரங்கள் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இங்கு பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பனிப்பாறைகள் உள்ளன.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும், கருங்கடலையும் பிரிப்பதாக அமைந்துள்ளது. ரோன், டான்யுப், மற்றும் போ உள்ளிட்ட பல ஐரோப்பிய ஆறுகளின் தோற்றுவாயாக இம்மலைத்தொடர் விளங்குகிறது.
பொதுவாக, கிழக்கு ஆல்ப்ஸ், மேற்கு ஆல்ப்ஸ் என்று இம்மலைத்தொடர் இரு பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. ரைன், லிரோ, மேரா என்ற நதிகளை ஒட்டி, கான்ஸ்டன்ஸ் மற்றும் கோமோ என்ற ஏரிகளுக்கு இடையில் இப்பிரிவு நிகழ்ந்துள்ளது.
மேற்கு ஆல்ப்ஸில், பதினாறாயிரம் அடி உயரமுள்ள மான்ட் என்பது மிக உடரமான சிகரமாக விளங்குகிறது. கிழக்கு ஆல்ப்ஸில் பதிமூன்றாயிரம் அடிகளுக்கு மிகுந்த பிஸ் பெர்னியா என்பதே உயரமான சிகரமாகும்.
ஆர்வம், வணிகம், ஆராய்ச்சி, சுற்றுலா, யாத்திரை என்று பல காரணங்களுக்காக ஆல்ப்ஸ் மலைத் தொடர் மனிதனை வசீகரித்துத் தன்பால் இழுக்கிறது.
அங்காங்கே மலைச்சரிவுகளையும், இடைப்பட்ட சமவெளிகளையும் கடக்கச் சாலைகள், ரயில் பாதைகள், நடைபாதைகள் இருக்கின்றன. அதனால், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் வசதியாகப் பயணம் செய்வது இன்றைக்கு சாத்தியமாகி இருக்கிறது.
மலையின் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதற்கேற்றபடி அங்கே தாவரங்ளும், உயிரினங்ளும் காணப்படுகின்றன. கிரேநோபிள், இன்ஸ்ப்ரூக், பொல்ஸானோ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆல்பைன் நகரங்களாக விளங்குகின்றன.
செயின்ட் காடர்ட் கணவாய் ஆல்ப்ஸின் குறிப்பிடத்தக்க சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும்.
மூவாயிரம் அடிக்கும் தாழ்வான உயரங்களில், குளிர் குறைவாக இருப்பதால், சிறு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. பலவகைத் தாவரங்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன. பனி மூடாத நேரத்தில், மலைத்தொடரே திடீரென்று உயிர்பெற்றது போல், பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ணமான பூக்களுடன் காண்போர் கண்களைக் கொள்ளை கொள்கிறது.
கோடை, குளிர்காலம் இரண்டு பருவங்களிலும் சுற்றுலாவுக்கு ஆல்ப்ஸ் வழி செய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில், பனிச்சறுக்குப் பந்தையங்கள் உள்ளிட்ட பல்வேறு பனி விளையாட்டுக்களில் பங்கு கொள்ள ஆர்வலர்கள் கூடுகின்றனர்.
இயற்கையின் மாபெரும் அழகுப் பிரதேசங்களில் ஒன்றாக ஆல்ப்ஸ் அமைந்துள்ளது. தரை மார்க்கம், ஆகாய மார்க்கம், மற்றும் ரயில் வழி என்று அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து ஆல்ப்ஸ் சென்று வர பல வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டு தோறும் பல கோடி சுற்றுலாப் பயணிகள் ஆல்ப்ஸ் மலைக்கு வருகின்றனர்.
இயற்கையை இயற்கையாக இருக்க விடுவோம்...
No comments:
Post a Comment