Thursday, January 20, 2011

 ஏலகிரி பச்சை மலை

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்திருக்கும் ஏலகிரி மலை, பிற கோடை வாசஸ்தலங்களோடு ஒப்பிடுகையில், இயற்கைச் சூழலிலும், தட்பவெப்ப நிலையிலும் ஓரளவு மாறுபட்டிருக்கிறது.
  கடல் மட்டத்திலிருந்து 1045 மீட்டர், அதாவது 3,400 அடி உயரத்தில் இந்த ஏலகிரி அமைந்திருக்கிறது. இதனால், கோடை காலத்திலும் சில்லென வீசும் காற்று, இரவில் எப்போதும் குளிர் என மனதுக்கு இதமளிக்கும் சூழல். குளிர்காலத்தில் இங்குள்ள குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ். கோடை காலத்தில் வெயில் நிலவினாலும், குளிர்ந்த காற்று வீசுவதை உணர முடியும்.
  இதுமட்டுமன்றி, மொத்தம் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும், காரி, பாரி, ஓரி, ஒüவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள். சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
  வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களூர் பகுதி மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. பெங்களூரில் கணினி மென்பொருள் துறையில், கணினியோடு போராடும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வார இறுதி நாள்களைக் கொண்டாட ஏற்ற இடமாக இன்றைக்கு ஏலகிரி மாறியிருக்கிறது. பெங்களூரிலிருந்து காரில் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஏலகிரியை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது. அதிலும் சிலர், இரு சக்கர வாகனங்களிலேயே நேராக ஏலகிரி மலைக்கு வந்து விடுகின்றனர்.
  ஏலகிரி மலை மீது முதலில் வரவேற்பது, 13-வது வளைவில் இருக்கும் டெலஸ்கோப்
மையம். வனத்துறை பராமரிப்பில், இலவசமாகவே மலை அடிவாரத்தில் இருக்கும்  பொன்னேரி கிராமத்தின் அழகை ரசிக்க முடியும்.
  அடுத்ததாக, புங்கனூர் கிராமத்தில் இருக்கும் ஏரி. ஏலகிரியில் படகு சவாரி செய்வதற்கான மிகப் பெரிய ஏரி இது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனப் பலர் ஒரே நேரத்தில் சவாரி செய்வதற்கான வகை, வகையான படகுகள் உள்ளன. சுற்றுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
  படகுத் துறைக்கு எதிரேயே இயற்கைப் பூங்கா அமைத்திருக்கின்றனர் சுற்றுலாதுறையினர். இதை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. புல்வெளிப் பூங்கா இது. இதன் நடைபாதையின் இரு பக்கமும் பச்சைப் பசேலெனப் புல் தரைகள், அழகான செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கையாகவே உருவாக்கப்பட்ட சிற்றருவி, தொட்டிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட மீன்கள், ரோஜாப் பூந்தோட்டம் என அழகின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
  புங்கனூருக்கு மிக அருகே இருக்கும் அத்தனாவூர். அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் பாராகிளைடிங் திருவிழா நடைபெறும் இடம் இருக்கிறது. திருவிழா நாட்களில் மட்டுமே இங்கு கூட்டம் அதிகம் காணப்படும்.
  அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் நிலாவூர் இருக்கிறது. அங்கு அம்மன் கோயிலும், அதையொட்டிய சிறு பூங்காவும் உண்டு. மலைகளில் இருந்து பெருகி, வழிந்தோடி வரும் ஓடை நீரைச் சேமித்து, சிறு படகு நிலையம் அமைத்திருக்கின்றனர்.
  காட்டு வழிப் பயணமாக, அங்கிருந்து மலைப் பாதையில் 8 கி.மீ. தூரம் நடந்து சென்றால் ஜலகாம்பாறை செல்ல முடியும். அங்கு முருகன் கோயில் இருக்கிறது. காட்டு வழியில், மூலிகைச் செடிகள், புதர் மண்டிய இடங்கள், உயர்ந்து வளர்ந்த பல வகை மரங்கள், வன விலங்குகளைக் காண முடியும். அருகேயிருக்கும் மங்கலம் கிராமத்துக்குச் சென்றால், சுவாமி மலை கோயிலுக்குச் செல்ல 4 கி.மீ. தூரத்துக்கு காட்டுவழிப் பாதை இருக்கிறது.
  ஆண்டுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும் கோடை விழா தவிர்த்து, இங்கு வாகனப் பெருக்கம் அவ்வளவாகக் கிடையாது. பேருந்து நிலையம் இல்லை.
  ஆட்டோக்களின் நெரிசல் இல்லை. அமைதியான சூழல்; கோடையில் அளவுக்கு ஏற்ற குளிர், மழைக்காலத்தில் உறையவைக்கும் குளிர் எனச் சூழலுக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொண்டு, இன்றும் இயற்கையின் இன்னிசையை வெளிப்படுத்துகிறது ஏலகிரி.

கட்டுரையாளர் - ஜெய்சங்கர்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மலை.

No comments: