Wednesday, May 20, 2009

மாவீரன் பிரபாகரன் சாகவில்லை
எங்கள் ''தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக சொல்லப்படுவதை நாங்கள் நம்பத் தயாரில்லை, ஒரு வேளை அவர் இறந்துவிட்டால் இலங்கைக்கு சென்று நாங்கள் இறப்பதைவிட இந்திய மண்ணிலே சாக விரும்புகிறோம் என்று அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்கள் உருக்கமுடன் கூறியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை தொடர்ந்து இலங்கை தமிழர் முகாமில் மக்களிடையே மிகுந்த பதற்றம் காணப்படுகிறது. மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
கடந்த இரண்டு நாள்களாக மிகுந்த கவலையோடு இருக்கின்றனர். ஆண்கள் வேலைக்கு போகாமல் உள்ளனர். கூட்டமாக தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அழுதவண்ணம் இருக்கின்றனர்.இலங்கை நிலவரம் குறித்து முகாம் மக்கள் போரில் பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு கூறும் செய்தியை நாங்கள் நம்பவில்லை, ஒரு வேளை பிரபாகரன் இறந்திருப்பாரானால் அந்த வேதனையோடு திரும்ப இலங்கைக்கு நாங்கள் செல்வதைவிட இந்தியாவிலேயே விஷம் குடித்து இறக்க ஆசைப்படுகிறேம் என்கிறார்கள்.
''போருக்கு பின்னர் இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாகவும், தாய்,தந்தை, உற்றார் உறவுகளை இலங்கை அரசு கொன்று குவித்த பிறகு சிங்கள மக்களுடன் ஒற்றுமையாய் வாழ்வது என்பது இயலாத காரியம்'' என்று முகாம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறிப்பிட்டார்.
''இலங்கையில் ஆயிரக்கனக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை அரசு தனது செயலை மறைத்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவே பிரபாகரன் போன்ற உருவ முக அமைப்பை செய்து இவர்தான் பிரபாகரன் என்று கூறி வருவதாகவும் அதை நம்பத் தயாராய் இல்லை என்றும் முகாம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இலங்கையில் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி உண்மை நிலவரம் பற்றி கேட்க முயற்ச்சிக்கும் போது அங்கு தொலைபேசி பேச்சு ஒட்டு கேட்கப்படுவதால் அவர்கள் இது குறித்து எதுவும் தெரிவிப்பதில்லை'' என்றும் முகாம் தமிழர்கள் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் தலைமையகத்திலிருந்து அறிவிப்பு வரும் வரை பிரபாகரனை பற்றி வரும் எந்தத் தகவலையும் நாங்கள் நம்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நன்றி தினமணி...
சோ.ஞானசேகர்

No comments: