மன்னார் வளைகுடாவில் அரிய வகை தவளை நண்டு
19ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்பட்ட "தவளை நண்டு' (Frog crab) என அழைக்கப்படும் அரிய வகை நண்டு இப்போது மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்திவரும் மீன்வள ஆராய்ச்சியாளர் டி. வைத்தீஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகில் மொத்தம் 6,793 வகையான கடல் நண்டுகள் உள்ளன. குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் 254 வகையான நண்டுகள் உள்ளன. இதில் 24 வகையான நண்டுகள் விஷத்தன்மை கொண்டவை.
இந்த வகை நண்டுகளிலிருந்து புற்றுநோய் உள்ளிட்ட பலவகை நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கடல் பகுதியில் வாழக்கூடிய தவளை நண்டு, ரனிணா ரனிணா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த வகை நண்டு 19-ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா பகுதியில் காணப்பட்டதாக மீன்வள ஆராய்ச்சியாளர் ஆன்டர்சன் என்பவர் 1888-ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில், விசைப்படகில் பிடித்துவரப்பட்ட கலசல் எனப்படும் கோழித் தீவனத்துக்கு பயன்படுத்தக் கூடிய மீன்களுடன் இந்த அரிய வகை தவளை நண்டு காணப்பட்டது.
4.5 செ.மீ. நீளமும், 10 கிராம் எடையும் கொண்ட இந்த வெள்ளை நிற நண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 310 மீட்டர் ஆழத்தில் பிடிபட்டுள்ளது.
இந்த நண்டு மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் இடம் பெயர்ந்தது குறித்தும், இதன் மருத்துவ குணம் குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் மேலும் அரிய தகவல்கள் கிடைக்கும்.
இயற்கையின் அதிசயம் கடல் வாழ் உயிரினம்...
No comments:
Post a Comment