Thursday, June 18, 2015

வால் மீனுக்கு கல்யாணம் இல்லாமலேயே பிரசவம்!


பொதுவாக, பிடித்து வைத்து வளர்க்கப்படும் உயிரினங்களில் இது நிகழ்வதுண்டு என்றாலும், இயற்கையான சூழலில் வாழும் உயிரினங்களில், இதுபோல நிகழ்வது அரிது. நியூயார்க்கிலுள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செய்த ஆய்வில், வால் சுறாக்கள், ஆண் மீன்களுடன் உறவு கொள்ளாமலேயும், குஞ்சுகள் ஈனுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கன்னி தாய் பிரசவிக்கும் இந்த முறைக்கு, 'பார்தினோஜெனெசிஸ்' என்று பெயர்.
பிடித்து வைத்து வளர்க்கப்படும் உயிரினங்கள், தங்கள் இனம் அழியாமல் காப்பதற்காக, இதுபோல பிரசவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்பதை, பல ஆண்டுகளாக உயிரியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நட்சத்திர மீன், தேனீக்கள் போன்றவையும், பாலுாட்டிகளில் முயல் இனமும், இது போல ஆண் கலவியில்லாமலும், செயற்கை கருத்தரிப்பு முறைகள் இல்லாமலும் கர்ப்பம் தரிப்பதுண்டு.
பறவையினங்களில், பண்ணைக் கோழிகளும் இதேபோல முட்டையிடுகின்றன. ஹங்கேரியில் ஒரு மீன் காட்சியகத்தில், பெரிய பெண் சுறா ஒன்று, ஆண் சுறாவுடன் உறவு கொள்ளாமலேயே கருவுற்று குஞ்சு பொரித்தது. ஆண் துணையின்றி கருத்தரித்த வால் சுறா பற்றி, செய்தி வெளிவர ஆரம்பித்ததுமே, ஆண் பாலினமே அவசியமற்றதாகி விடுமோ என்ற பீதியூட்டும் கேள்வியையும், சில உயிரியல் விஞ்ஞானிகள் கிளப்பி விட்டிருக்கின்றனர்.
மிரட்டலான தோற்றமுள்ள, 'சா பிஷ்' என்றழைக்கப்படும் வால் சுறா, விஞ்ஞானிகளை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் வால் சுறா, ஆண் மீனுடன் கலவி செய்யாமலேயே, குஞ்சுகளை ஈன்றிருக்கிறது.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

Wednesday, June 17, 2015

ஒரே ஆண்டில் 176 புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு!


 இந்திய வன விலங்குகள் பற்றிய விரிவான பதிவுகளை வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, இந்திய உயிரியல் சர்வே பிரிவிடம் தான் உள்ளது. இது மத்திய சுற்றுச்சூழல், வனவுயிர் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஓர் ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதிலும் களப்பணியில் இருக்கும், இசட்.எஸ்.ஐ.,யின் விலங்கியல் வல்லுனர்கள், புதிதாக, 176 விலங்கினங்களை கண்டுபிடித்து, விவரித்து பதிவு செய்துள்ளனர்.
 இந்த கண்டுபிடிப்புகளில், பூச்சியினங்களுக்கே முதலிடம். அடர்ந்த காடுகளில், யார் கண்ணிலும் படாமலேயே தப்பி விடும் பூச்சிகளில், 93 புது வகைகள், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 இந்த பட்டியலில், 23 வகை புதிய மீன்கள்; நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை போன்றவற்றில், 24 புது இனங்கள்; 12 வகை புதிய சிலந்திகள்; நண்டு, இறால் போன்ற வற்றில், 12 புது வகைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கினங்களை, மிக குறுகிய புவிப்பரப்பில் தான் காண முடிகிறது. எனவே அவை ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்' என்கிறார் இசட்.எஸ்.ஐ.,யின் இயக்குனரான டாக்டர் கே.வெங்கட்ரமணன்.
 பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வது, பல்லுயிர்தன்மை செறிந்த கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தான். இந்தியாவில் கிழக்கு இமாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள், பல்லுயிரி மண்டலங்களாக, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய உயிரியல் வல்லுனர்கள், 176 புதிய விலங்குகளை கண்டுபிடித்து இருக்கின்றனர். 'இவை வனவுயிர் அறிவியலுக்கு புதியவை' என, கோல்கட்டாவிலுள்ள இந்திய உயிரியல் சர்வேயான, இசட்.எஸ்.ஐ., கூறுகிறது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...