Saturday, September 6, 2014

மரம் வளர்க்க ஒரு சட்டம்

   
   மரங்கள் இயற்கையின் கொடை நாம் இந்த பூமியில் வாழ வழி செய்பவை. ஆனால் மனிதர்கள் மரங்களை போற்றுவதில்லை. தனது சுய நலத்துக்காக மனிதன் தொடர்ந்து மரங்களை அழித்துக் கொண்டே இருக்கிறான். இந்த கேடு கெட்ட பழக்கத்துக்கு எந்த நாடும் விதி விலக்கு அல்ல. எல்லா நாட்டிலும் மனிதர்கள் தம் பங்குக்கு மரங்களை அழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பில்ப்பைன்ஸ் நாட்டில் 50 வருடங்களுக்கு முன்பு மரம் வெட்டுதல் மிகப்பெரிய தொழிலாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. காடுகள் கண் மண் தெரியாமல் அழிக்கப்பட்டன, பெரும்பாலன காடுகள் இருந்த சுவடே தெரியாமல் தரைமட்டமாயின. மரங்கள் இல்லாததால் சுற்றுச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாட்டில் மழை பெய்வது வெகுவாக குறைந்து போனது. வெயில் கொளுத்தியதது, வறட்சி ஏற்பட்டது.
   பில்ப்பைன்ஸ் அரசு தாமதமாக கண் விழித்துக்கொண்டது. பெரிய அளவில் மரங்கள் வளர்த்து நாட்டின் சுற்றுச் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவில்லை என்றால் பெரும் பஞ்சம் ஏற்படும் என்று நினைத்தது. சூழலை கட்டுப்படுத்தவும், நாட்டின் அழகை மேலும் மேம்படுத்தவும் 1977-ம் ஆண்டில் ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்தது. அதன்படி 10 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒவ்வொரு மாதமும் ஒரு மரம் நட்டு அது அழிந்து விடாமல் பாதுகத்து வளர்க்க வேண்டும் என்று கூறியது.
  இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அரசால் வழங்கப்படும் எல்லா சலுகைகளும், உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது போக 175 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் மரங்கள் வளர்ப்பை ஊக்குவிப்பதர்காக மக்கள் விரும்பும் மரங்ளின் நாற்றுகள் அரசு இலவசமாக வழங்கியது.
 இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அரசின் குறியீட்டை விட அதிகமாக மரம் வளர்த்தவர்களுக்கு அரசாங்கம் ஒரு சான்றிதழும், அரசு வேலைகளில் முன்னுரிமையும் கொடுத்தது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகள் முடிவதற்குள் 36 கோடி புதிய மரங்கள் நாட்டில் முளைத்தன. இன்றைக்கு இயற்கை வளம் நிறம்பிய ஒரு தேசமாக பில்ப்பைன்ஸ் பசுமையோடு திகழ்கிறது.
  மக்கள் துணையிருந்தால் எதுவும் சாத்தியமே. நாமும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் விழிப்புணர்வை மட்டும் கொடுத்துக் கொண்டே இருப்பது. அரசு சட்டமாக கொண்டு வந்து கடுமையாக அதை அமல்படுத்தினால் இந்தியாவும் ஒரு பசுமை பூமிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

No comments: