பாம்பினங்களிலேயே மிகவும் அழகிய நிறங்கொண்ட பாம்பு "பறக்கும் பாம்பு' ஆகும். உண்மையில் இது பறவைகள்போல் பறப்பதில்லை. ஆனால் உயர்ந்த மரக்கிளையிலிருந்து கீழே உள்ள கிளைக்கு காற்றில் எழும்பிச் செல்கிறது. மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும்.
மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. இது, தாவும்போது தன் உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு கீழ் நோக்கி வரும். அதே நேரத்தில் தன் வயிற்றுப் பகுதியை இழுத்துக்கொள்ளும். இந்தச் செயலால் இதன் விலா எலும்பின் வெளிப்பகுதி அகன்று நிற்கும். இதனால், பார்ப்பதற்கு இந்தப் பாம்பு பறப்பது போலத் தெரியும்.
இந்தப் பாம்பு மென்மையான செதில்களுடன் மிகமெலிந்த உடலமைப்பைக் கொண்டிருக்கும். ஏறத்தாழ ஒரு மீட்டர் நீளம் இருக்கும். இதன் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடுவில் பொட்டு வைத்ததுபோன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும்.
இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக்கொண்டிருக்கும் இந்தப் பாம்பு "அணிகல மரப் பாம்பு' என்றும், "தங்க மரப் பாம்பு' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பாம்பு "கொலுபிரிடே' என்ற குடும்பத்தைச் சேர்ந்த விஷமற்ற மரப்பாம்பு வகையாகும். நம் நாட்டில் காணப்படும் பறக்கும் பாம்பு "கிரிசோபீலியா ஆர்நேடா' என்ற இனத்தைச் சேர்ந்தது. இவ்வகைப் பாம்புகள் நம் நாட்டில் தென்மேற்குப் பகுதி மலைகளில் 1500 அடி உயரத்தில் காணப்படுகின்றன. மேலும், வட கிழக்குப் பகுதிகளான பிகார், ஒரிசா, அசாம் ஆகிய காட்டுப் பகுதிகளிலும், இலங்கை, தென் ஆசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
இந்தப் பாம்பின் மற்றொரு இனமான "கிரிசோபீலியா பார்டேசி' அந்தமான் தீவில் காணப்படுகிறது. பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலும், பெரிய மரங்களிலும் வசிக்கும் இந்தப் பாம்புகள், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வீடுகள் மற்றும் பூங்காக்களின் சுற்றுப்புறங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
மற்ற மரப் பாம்புகளைப் போல இந்தப் பாம்புகளும் பகல் வேளையில் இரை தேடுகின்றன. இவை பொதுவாக தாழ்வான புதர்களிலும், புல்லிலும், மரங்களிலும் காணப்படும் தவளை, பல்லி, ஓணான், சிறிய பறவைகளின் முட்டைகள், பூச்சிகள்போன்றவற்றை உண்ணும். இந்தப் பாம்புகளின் விஷம், சிறு பிராணிகளை அசைவற்றுப்போகச் செய்வதற்கு உதவுகிறது. ஆனால், இந்த விஷம் மனிதனுக்கு எந்தவிதமான தீங்கையும் விளைவிப்பதில்லை. பறக்கும் பாம்புகள் பெரும்பாலும் இரையை உயிருடனே உட்கொள்ளும். மரக் கிளைகளில் வேட்டையாடும்போது மிக மெதுவாக ஊர்ந்து செல்லும்.
இவை ஏறத்தாழ ஆறுமுதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடுவதாகத் தெரிகிறது.
இந்தப் பாம்புகளின் பறக்கும் தன்மையைப் பற்றி குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பழங்கதைகள் இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இவை பறவைகளாக இருந்து பின்னர் பாம்பாக மாறிவிட்டதாக இந்தப் பழங் கதைகள் கூறுகின்றன. ஆனால் இது உண்மையில்லை. அழகிய நிறங்கள் கொண்ட இந்த அணிகலப் பாம்புகள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் பாம்புகள் வித்தியாசமான நிறங்களில் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே, இவற்றைப் பார்ப்பவர்கள் நச்சுப் பாம்பு என்று நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். இது தடுக்கப்பட்டு இந்தப் பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டும்.
இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ...