Saturday, March 23, 2013

கடல் வெப்பமாவதால் ஒல்லியாகும் மீன்கள் விஞ்ஞானிகள் பகீர் தகவல்


 பருவநிலை மாற்றத்தாலும் கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் மீன்களின் உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். 50 ஆண்டுகளில் மீன்களின் சைஸ் 20 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று கூறியுள்ளனர். கடல் வெப்பம் தொடர்பாக கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலையின் மீன்வள ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல்  வெப்பம் அதிகரிப்பால் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது. 
  கம்ப்யூட்டர் உதவியுடன் 600-க்கும் மேற்பட்ட கடல் மீன் வகைகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி  ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் வில்லியம் சியூங் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருவநிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவது தெரிந்ததே. கடல் வெப்பத்தால் மீன்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது. 
 மிகச்சிறிய அளவில் தொடங்கி பல டன் வரை பல்வேறு சைஸ்களில் மீன்கள் இருக்கின்றன. கடல் வெப்பம் அதிகரிப்பால், மீன்களின் அதிகபட்ச  வளர்ச்சியானது குறைந்துகொண்டே போகிறது. 2000-ல் இருந்ததைவிட மீன்களின் எடை 2050-ல் 14 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது.  பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடல்களில் (இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் உள்பட) இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது.  இவ்வாறு வில்லியம் சியூங் கூறினார். 
 மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பிரிட்டிஷ் கொலம்பியாவின் மீன்வள ஆய்வு மையம் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு  முன்பு டேனியல் பாலி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுதான்  மீன்கள் தொடர்ச்சியாக வளர்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்தால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்களின் உடல் வளர்ச்சி குறையும் என்று ஆய்வு  முடிவில் டேனியல் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.


மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.


Tuesday, March 19, 2013

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.

பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும் தன்மை எரிமலைகளிலிருந்து வெளியேறும் சில வாயுக்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

எரிமலைகள் வெடிக்கும்போது வெளியேறும் குழம்பிலிருந்து வெளிப்படும் சல்ஃபர் டையாக்சைடு (Sulphur dioxide) வாயு பூமியிலிருந்து சுமார் 12 முதல் 20 மைல்கள் உயரத்தில் உள்ள வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்ஃபெரிக் ஏரோசால் (stratospheric aerosol layer) அடுக்கிற்கு செல்கிறது. அங்கு ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் சஃல்பர் டையாக்சைடு வாயு, சல்ஃப்யூரிக் அமிலம் (Sulphuric acid) மற்றும் நீர் ஆவியாக (water vapour) மாறுகிறது.

வளிமண்டலத்தில் இருக்கும் இந்த சல்ஃப்யூரிக் அமிலமும் நீர் ஆவியும், சூரிய வெப்பத்தை பிரதிபலித்து அதனை விண்வெளிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது. சூரிய ஒளி வளிமண்டலத்தை அடையும் முன்பே இது நிகழ்ந்துவிடுவதால், வெப்ப வாயுக்களால் பூமி வெப்பமயமாதல் குறைக்கப்படுகின்றது.

எரிமலையின் இந்த செயல்பாடுகளினால் 2000 ஆம் ஆண்டு முதல் பூமி வேப்பமயமடைதல் 25 சதவீதம் குறைத்துள்ளது.

கொலராடோ பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ள இந்த தகவலை வைத்து வருங்காலத்தில் பூமியின் வெப்பநிலை எப்படி இருக்குமென உறுதியாக சொல்லமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Friday, March 15, 2013

தர்ப்பூசணி


  கோடையை தணிக்கும் இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தர்ப்பூசணி. இது தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும்  பரவியது. வெப்ப மண்டல மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் அதிக அளவில் விளையும், நிறம் மற்றும் வடிவத்தில் வேறுபட் வகைகளில் தர்ப்பூசணி விளைகிறது. சிவப்பு சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி பிரபலம். ஆனால் ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி வகைகளும் உள்ளன. 
  தர்ப்பூசணி அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. அத்துடன் உடல் இயக்கத்திற்கு தேவையான மின்னாற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகளும் அதிக அளவில் உள்ளன.
  குறைந்த ஆற்றல் வழங்கும் கனி தர்ப்பூசணி. 100 கிராம் தர்ப்பூசணி 30 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. கொழுப்புச் சத்து மிகக் குறைந்த அளவிலும், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் இதர சத்துகள் மிகுதியாகவும் கொண்டது தர்ப்பூசணி.
  வேறு எதிலும் இல்லாத அளவுக்கு மிகுதியாக 'வைட்டமின் ஏ' சத்து தர்ப்பூசணியில் உள்ளது. 100 கிராம் தர்ப்பூசணியில் 569 மில்லிகிராம் 'வைட்டமின் ஏ' கிடைக்கிறது. இது கண்  பார்வைத் திறனுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் அத்தியாவசியமாகும். சருமத்திற்கு பொலிவு தரும். நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதிலும் 'வைட்டமின் ஏ' பங்கெடுக்கிறது.
  லைகோபின், பீட்டா கரோட்டின், லுடின்,  ஸிசாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை தொண்டை, இரைப்பை, மார்பு, நுரையீரல், குடல் போன்ற பாகங்களைத் தாக்கும் புற்றுநோய்களில் இருந்து உடலைக் காக்கும். உடற்செயல்களைத் தூண்டும்.
  புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் லைக்கோபின் நிறமி தர்ப்பூசணியில் மிகுதியாக உள்ளது.
  பொட்டாசியம் தாது தர்ப்பூசணியில் நிறைந்துள்ளது. இது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் முடக்குவாதம், இதய பாதிப்புகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கெடுக்கிறது.
  வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1, வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும், மாங்கனீசு தாதுவும் சிறந்த அளவில் கிடைக்கிறது. வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்பு பொருள்கும். உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக செயல்படுவதோடு, தீமை பயக்கும் பிரீ-ரேடிக்கல்களை துப்புரவு செய்கிறது.
  தர்ப்பூசணியை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து பின்னர் தோல் பகுதியை வெட்டி அகற்றிவிட்டு துண்டுகளாக்கி சாப்பிடவேண்டும். தோல் பகுதியுடன் துண்டாக்கி சாப்பிட்டால் கிருமித் தொற்றுகளால் நோய்கள் ஏற்படலாம்.
   இயற்கை சுவையில் தர்ப்பூசணியை அப்படியே சாப்பிட்டு மகிழலாம்.
  பழ சாலட்டுகளில் தர்ப்பூசணி துண்டுகளை சேர்த்து ருசிக்கலாம்.
  தர்ப்பூசணி ஜாம் செய்யலாம். ஜூஸ் செய்து பருகலாம்.
  தர்ப்பூசணி விதைகளை வருத்து நொறுக்குத் தீனியாக சுவைக்கலாம்.
  தர்ப்பூசணியின் வெண்மை நிற தோல் பகுதியை காய்கறிபோல் சமைக்கலாம்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள்.