Monday, December 6, 2010

சந்நியாசி நண்டு

சந்நியாசி நண்டு



  சொந்த,பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.
   இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
   ""பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.
   புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
   இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.
  புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
  இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.
   ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
   இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது'' என்றார்.

நன்றி தினமணி...